நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும், வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் உள்ள சிக்கல்களைக் களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் எரிவாயு இருப்பு மற்றும் விநியோகம் குறித்து நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
முக்கிய அம்சங்கள்:
தன்னிறைவு பெற்ற இந்தியா: பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் 100% திறனுடன் இயங்கி வருகின்றன.
போதுமான இருப்பு: இந்தியாவிடம் 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறன் உள்ளது. கச்சா எண்ணெய் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
வீட்டு உபயோக எரிவாயு: வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் சிலிண்டர் மூலம் வழங்கப்படும் CNG விநியோகம் எந்தவித தடையுமின்றி சீராக நடைபெற்று வருகிறது.
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு – தீர்வு என்ன?
தற்போது பெருநகரங்களில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களைப் பெறுவதில் நுகர்வோர், குறிப்பாக ஓட்டல் துறையினர் சில சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்துப் பேசிய சுஜாதா சர்மா:
“எல்பிஜி விநியோகம் சவாலாக இருந்தாலும், நாட்டில் உள்ள 25,000 விநியோகஸ்தர்களில் ஒருவர்கூட இருப்பு தீர்ந்துவிட்டதாகப் புகார் அளிக்கவில்லை. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பி பீதியில் அதிகப்படியான எரிபொருளை வாங்க வேண்டாம்.”
மேலும், வர்த்தக ரீதியாக சிஎன்ஜி (CNG) பயன்படுத்தும் நுகர்வோர்கள், தடையற்ற விநியோகத்திற்காக பிஎன்ஜி (PNG) இணைப்புக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக உள்ளூர் எரிவாயு விநியோக ஏஜென்சிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



