இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு தளர்த்தியுள்ளது.
2016-ஆம் ஆண்டு இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து, ரூ.100-க்கு மேற்பட்ட இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் தடை விதித்திருந்ததால், ரூ.25,000 வரம்பு இருந்தபோதிலும் பயணிகள் ரூ.100 நோட்டுகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்தது.
தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ள நேபாள அரசு, இந்தியா மற்றும் நேபாள பயணிகள் இனி ரூ.25,000 வரை இந்திய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நேபாள மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடேல் கூறுகையில், “பிப்ரவரி 11-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, 2016 நவம்பர் 9-க்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை பயணிகள் கொண்டு செல்லலாம். ஆனால், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கான தடை தொடரும்.
மேலும், நேபாள குடிமக்கள் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும் இந்திய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வரவோ, நேபாளத்திலிருந்து இந்தியா அல்லாத வேறு நாடுகளுக்கு இந்தியப் பணத்தை எடுத்துச் செல்லவோ அனுமதி இல்லை” என்று தெரிவித்தார்.



