தமிழகத்தில் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை (ஆக.19) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக நாளை (ஆக.19) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஆக.23 மற்றும் 24-ம் தேதிகளில் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆக.19 முதல் 22-ம் தேதி வரை உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும்.
மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4 செ.மீ. மழை
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 3 செ.மீ., மதுரை மாவட்டம் கள்ளந்திரி, நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



