ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படைக்கு சொந்தமான கோப்புகள், பதிவேடுகள், வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பராமரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவல் துறைக்கான வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், ரோந்துப் பணிக்காக இரு சக்கர வாகனங்களை இயக்கும் காவலர்களின் ஓட்டுநர் உரிமங்களை காண்பிக்குமாறு டிஐஜி முத்துசாமி கேட்டறிந்தார். அப்போது ஒரு சிலர் மட்டுமே காண்பித்தனர். பலரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை.
காவல் துறையினராக இருந்தாலும் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்ட டிஐஜி முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறையின் உட்கட்டமைப்பு பணிகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் காவல் துறைக்கான ஆயுதப்படை மைதானம், காவலர்கள் தங்கும் குடியிருப்புகள், பழுதடைந்துள்ள காவல் நிலையங்கள் ஆகியவற்றை சீரமைப்பதற்காகவும் மற்றும் புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கும் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு என தனியாக தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டை அருகே ஆயுதப்படை மைதானத்துக்கான இடம், காவலர் குடியிருப்புகளுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வேலூர் சரகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருட்டு வழக்குகளில் பொருட்களை மீட்பதில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக – திருட்டு வழக்குகளில் பணம், நகைகளை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் அதிகளவில் மீட்டும் குற்றவாளிகளையும் கைது செய்தும் வருகின்றனர். காவேரிப் பாக்கம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில் 3 நாட்களிலேயே குற்றவாளியை பிடித்து நகை, பணம் மீட்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடு போன 358 கைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆற்காடு நகரில் ஆரணி சாலையில் போக்குவரத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2024ஆம் ஆண்டில் கைபேசி திருட்டு குறித்து புகார் அளிக்க புதிய செயலி கொண்டு வரப்படும்” என்று டிஐஜி முத்துச்சாமி தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா, குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.