அதிமுக ஆட்சியின் ரகசியங்களை நான் வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இயக்க ஆலோசனைக் கூட்டம் கோவை சூலூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பழனிசாமி முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அப்போது நான் கையெழுத்திட்டுதான் கோப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செல்லும், நான் அந்த ரகசியங்களை வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
தனிக்கட்சி தொடங்குமாறு எனது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் நான் கடமையாற்றுவேனே தவிர, எந்த நாளும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவுடன் எங்கள் உறவு சீராக இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி சிறந்த ஆட்சியைக் கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால், நாடு சிறப்பாக இருக்கும். இதுதான் வரும் மக்களவைத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு. அரசியல் ரீதியாக பழனிசாமி இனி முன்னேறவே முடியாது.
அதிமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்தன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கோடநாடு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த விவகாரத்தில் 6 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில அரசியல் ரகசியங்கள் உள்ளன. அவற்றை வெளியில் சொல்ல முடியுமா?” என்று சூசகமாக பேட்டியளித்தார்.