காங்கிரஸ் நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைத்து கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறிவிட்டது
காங்கிரஸ் நிர்வாகிகளை தி.முக.வில் இணைத்து கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறிவிட்டது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
தேர்தல் பணியை புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி துவங்கி விட்டது. இக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்களான ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ஹரீஷ் சவுத்ரி, டாக்டர் அஜய்குமார், நிர்வாகி ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி வந்தனர். கட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிக்குழு கூட்டம் புதுச்சேரி பொறுப்பாளர் டாக்டர் அஜய்குமார் தலைலையில் நடைபெற்றது.
கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசினர். அப்போது 5 பொதுச் செயலாளர்கள், நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் மேலிட பொறுப்பாளருக்கு கடிதம் கொடுத்தனர்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் பேசியதாவது:
வரும் தேர்தலை குறித்து நிலைப்பாடு தொடர்பாக விவாதித்தோம். முக்கிய கருத்துகளை தலைவர்களிடம் சொல்வதாக தெரிவித்துள்ளனர்.இது இந்தியா கூட்டணி. புதுச்சேரியிலுள்ள காங்கிரஸோ, தி.மு.க.வோ முடிவு செய்ய முடியாது. கட்சித் தலைமை முடிவு செய்யும். யார் நிற்க வேண்டும் என்று சொன்னாலும் வேலை செய்வோம். புதுச்சேரியில் நிற்பதை ராகுலோ, ஸ்டாலினோதான் முடிவு செய்ய முடியும் என்றார்.
இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்களை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது குறித்து கேட்டதற்கு, அது எங்கள் காதில் விழவில்லை. நேரடியாக எதையும் கேட்கவில்லை என குறிப்பிட்டார்.
புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் அஜய்குமார் கூறியதாவது
இந்திய அரசியலமைப்பு சட்டங்களை பா.ஜ.க. அழிக்கிறது என்பதில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் தெளிவாக இருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பா.ஜ.க. தாக்கி வருகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் பேச்சுவார்த்தை என்பது ஆரோக்கியமான அனுகுமுறையில் உள்ளது.
தமிழ்நாடு – புதுச்சேரி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கி விட்டோம். விரைவில் இட ஒதுக்கீடு தெரியவரும். நாளை (இன்று) தமிழ்நாடு தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடக்கும் என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது
புதுச்சேரி மக்களவை தேர்தலில் பலமுறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையில் இந்தியா கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இரு தினங்களுக்கு முன் தன்னையும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தையும் திமுக நிர்வாகிகள் ஒருமையில் கூட்டணி தத்துவத்தை மீறி பேசி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த திட்டமிட்டே தி.மு.க.வில் சிலர் இதனை செய்துள்ளனர். கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான். காங்கிரஸ் நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைத்து கூட்டணி தர்மத்தை மீறியவர்களுக்கு காங்கிரசை விமர்சிக்க உரிமை கிடையாது.
அரசியல் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு. தங்களுடைய கட்சியை வளர்க்கவும், ஆட்சிக்கு வரவைக்கவும் உரிமை உண்டு. ஆனால் தவறாக பேசுவதையும், தரக்குறைவாக பேசுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும். கூட்டணியில் குழப்பத்தை தி.மு.க. கொண்டு வர வேண்டாம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.