நெமிலி அருகே தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் வீட்டிற்காக உபயோகப்படுத்த கழிவுநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். அந்தத் தொட்டியில் புள்ளிமான் ஒன்று விழுந்து கிடந்ததை பார்த்து அரக்கோணம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பொதுமக்களின் உதவியுடன் புள்ளி மானை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். வெளியே வந்தவுடன் புள்ளிமான் துள்ளி குதித்து ஓடிச் சென்றது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. அப்படி ஓடி வந்த மான் தண்ணீர் இல்லாத தொட்டியில் விழுந்து தவித்தது. எனவே வனத்துறை அதிகாரிகள் காப்புக்காடுகளில் தண்ணீர் தொட்டி அமைத்து விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.