ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், உரிமையாளர் உட்பட 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
காக்கிநாடா மாவட்டம் சாமர்லகோட்டா பகுதியில் உள்ள வேட்லபாளையம் என்ற இடத்தில், வீரய்யா என்பவருக்குச் சொந்தமான ‘சூர்யஸ்ரீ’ பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. 6 ஷெட்களுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.
நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில், வழக்கம்போல பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தின் வீரியம் காரணமாக தொழிற்சாலை தரைமட்டமானது.
அதிர்ச்சியூட்டும் பாதிப்புகள்
உயிரிழப்புகள்: இந்த கோர விபத்தில் உரிமையாளர் வீரய்யா உட்பட 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
உடல் பாகங்கள் சிதறின: வெடி விபத்தின் தாக்கம் சுமார் 5 கி.மீ. தூரம் வரை கேட்டது. உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை உள்ள விவசாய நிலங்களில் சிதறிக் கிடந்தன.
மீட்புப்பணி: காக்கிநாடாவிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உறவினர்கள் உடல்களை அடையாளம் காண முடியாமல் கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
சிகிச்சை – நிலவரம்
காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் நேரில் ஆய்வு
விஜயநகரம் சுற்றுப்பயணத்தில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தகவலறிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் காக்கிநாடா விரைந்தார். மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



