திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு தலைமையேற்று கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வந்தவாசி வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் நம்பேடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நம்பேடு கிராமத்தில் காயக்குடிகளாக நாங்கள் விவசாயம் செய்து வயிற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் பட்டா எண் 3680ல் தனியார் ஒருவர் புதியதாக கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் அமைத்து தொழில் தொடங்கியுள்ளார்.
கல்குவாரி அமைந்துள்ள பகுதியில் வீடும் வயலுமாக கால்நடைகளுடன் வாழ்ந்து வருகின்றோம். அந்த பகுதியையொட்டி இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
பகுதியை யொட்டி இடையந்தாங்கல், கண்டேரிபுரம் கிராமங்கள் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த நிலம் விவசாயம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் நிலத்தினை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரியை தடை செய்யக்கோரி வந்தவாசி தாசில்தார் மற்றும் செய்யாறு சார்ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் இயங்கி வரும் கல்குவாரி இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மனுவனை பெற்றுக்கொண்ட கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.