மின்சார வாகனங்களின் (EV) ப்ளூடூத் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைச் சட்டவிரோதமாக திடீரென முடக்கும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு BAT-BMS, SMART BMS, LOSSIGY உள்ளிட்ட 7 செயலிகளை உடனடியாகத் தங்களது ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தடைக்கான முக்கியக் காரணங்கள்:
மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில் இந்த செயலிகளைத் தடை செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது:
- பேட்டரிகளை செயலிழக்கச் செய்தல்: இந்த செயலிகளை தவறான வழியில் பயன்படுத்தி இ-ரிக்ஷா மற்றும் இதர மின்சார வாகனங்களின் பேட்டரிகளை போன் மூலமாகவே முடக்குவது.
- வாகன பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் திடீரென ஆஃப் செய்யப்படுவதால் ஏற்படும் விபத்து அபாயங்கள்.
- பொதுப் போக்குவரத்து முடக்கம்: வாழ்வாதாரப் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்குத் தேவையின்றி தடங்கல்களை ஏற்படுத்துவது.
பின்னணி என்ன?
டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் இ-ரிக்ஷாக்களை (E-Rickshaws) தங்களது முக்கிய வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்பு லித்தியம் பேட்டரிகளில் ப்ளூடூத் வசதி உள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த விலை குறைவான பேட்டரிகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் (Cybersecurity) இல்லாத காரணத்தால், 10 முதல் 15 மீட்டர் தூரத்தில் இருந்துகொண்டே ‘BAT-BMS’ போன்ற செயலிகள் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள ‘டிஸ்சார்ஜ் சுவிட்ச்’ (Discharge Switch) மற்றும் ‘சார்ஜ் சுவிட்ச்’ ஆகிய ஆப்ஷன்களைப் பயன்படுத்தி, வாகனத்தின் மோட்டாருக்குச் செல்லும் மின்சாரத்தை மர்ம நபர்கள் துண்டித்து விடுகின்றனர். இதனால் ஓடும் வாகனங்கள் நடுவழியில் சட்டென்று நின்றுவிடுகின்றன.
ரீல்ஸ் மோகத்தால் விபரீதமான ‘விளையாட்டு’:
தொடக்கத்தில் சிலர் இதை வேடிக்கைக்காகச் செய்தாலும், தற்போது இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சில கன்டென்ட் கிரியேட்டர்கள், ஓடும் இ-ரிக்ஷாக்களை போன் மூலம் ஆஃப் செய்து விளையாடும் வீடியோக்களை ‘Tirris’, ‘Tirri Remote Control’ ஆகிய ஹேஷ்டேக்குகளில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அமைச்சகத்தின் நடவடிக்கை:
இது குறித்துப் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர், “இ-ரிக்ஷா பேட்டரிகளை ஷட் டவுன் செய்யும் இரண்டு செயலிகள் ஏற்கனவே ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்தும் இதுபோன்ற செயலிகளை ஆப் ஸ்டோர்கள் (கூகுள், ஆப்பிள்) தாங்களாகவே முன்வந்து கண்காணித்து நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மின் வாகனங்களின் தொழில்நுட்பக் குறைபாடுகளைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்தச் செயலிகள் முடக்கப்பட்டுள்ளது, இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



