குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நீதி உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “போக்சோ சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிக்க வேண்டும்.
குறிப்பாக, சிறார்களுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கோ அல்லது உள்ளூர் காவல் துறையினரிடமோ இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2024-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அந்த தீர்ப்பு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்கள் குறித்து புகார் அளிக்கத் தவறும் சமூக வலைதளங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல், கட்டாயமாக புகாரளித்தல், மின்னணு ஆதாரங்களை பாதுகாத்தல், விசாரணை முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் கட்டுப்படுத்தவும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட உள்ளது.



