முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் பணியில் இருந்த ஒருவரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘Take Diversion’ அரசு
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற காரணத்தைக் கூறி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை இந்த ‘Take Diversion’ அரசு கைது செய்துள்ளது. தனது தொகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த ஒருவரை, இவ்வளவு அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? தற்போதைய முதலமைச்சர் சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சட்ட ஒழுங்கு சீர்குலைவு
திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி கொடுத்த புகாரில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத இந்த ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த வேகத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க துப்பில்லாமல், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இணைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் இந்த அரசின் லட்சணம் இதுதானா?
“விமர்சிப்பவர்களைக் கைது செய்து காலம் கடத்துகிறார் முதலமைச்சர்”
அவதூறு வழக்குகளைக் காரணம் காட்டி கைது செய்வதாக இருந்தால், இன்றைய ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களுக்கெல்லாம் எத்தனை பேரைக் கைது செய்ய வேண்டும்? வாக்களித்த மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், குதிரை பேரத்தின் மூலமாக மட்டுமே தனது நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள முதலமைச்சர், தன்னை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து காலத்தைக் கடத்திவிடலாம் என நினைக்கிறார்.
“ஆணவம் எப்போதும் அழிவிற்கே வழிவகுக்கும்!” என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.



