போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் இளம் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பு. உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது” என்றார்.
மேலும், “மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ, மாணவர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்த விவகாரத்தில் அரசு எந்தவித கவுரவப் பிரச்சினையையும் பார்க்கவில்லை. அந்த பேச்சுவார்த்தையில் ஜே.பி. நட்டாவும் நானும் பங்கேற்போம். படிப்படியாக உரையாடல் மூலம் தீர்வை நோக்கி முன்னேறுவோம்” என்று கூறினார்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மாணவர் பிரதிநிதிகளுக்கு நான்கு முறை பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜிதேந்திர சிங், “போராட்டத்துக்குக் காரணமான பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் வெளிப்படையான மனதுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மாணவர் சமூகம், இளைஞர்கள் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் நலனையே அரசின் முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க அரசு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய வினாத்தாள் கசிவு விவகாரங்களில் தொடர்புடையவர்கள் மீது விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் முக்கிய முடிவையும் பிரதமர் எடுத்துள்ளதாக ஜிதேந்திர சிங் கூறினார்.
இறுதியாக, “அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை மாணவர்களை பணிவுடன் அழைக்கிறேன். பேச்சுவார்த்தையில் பங்கேற்று தீர்வு காண முன்வாருங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.



