த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து, உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி முன் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி சன்மானம் வழங்குவதாக சிலர் தன்னிடம் பேசியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.
மேலும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருந்தது.
இதன்படி, செந்தில் பாலாஜி சனிக்கிழமை காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.25 ஆயிரம் தொகைக்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார். பின்னர் வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், அவரது முன் ஜாமீன் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையொப்பமிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கிடையில், வேறு வழக்கு தொடர்பாக கரூரில் இருப்பதால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



