பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 88வது பிறந்த நாளையொட்டி இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்தார்.
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அவரது மனைவி சரஸ்வதி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ராமதாஸ், “இன்று எனது 88வது வயது தொடங்குகிறது. இந்த நன்னாளில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்கிறேன். இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன். இனி அரசியல் பேச மாட்டேன்; அரசியலுக்கு வழிகாட்டவும் மாட்டேன். என்னைப் பார்க்க வருபவர்களிடம் நலம் விசாரிப்பேன். அதோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், இனி கட்சியின் அரசியல் பொறுப்புகளை அன்புமணி ராமதாஸ் கவனித்துக் கொள்வார் என்றும், அவருக்கு அவரது மனைவி சவுமியா அன்புமணி துணையாக இருப்பார் என்றும் தெரிவித்தார். “நாங்களும் அவருக்கு உறுதுணையாக இருப்போம். ஆனால் அரசியல் நடவடிக்கைகளில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறினார்.
சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் மேலும் வளர அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், அதுவே தனக்கு வழங்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார். சரஸ்வதி அம்மையார் விதைத்த கல்வி விதை இன்று ஆலமரமாக வளர்ந்திருப்பதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறினார்.
தனக்கு இன்னும் தலைச்சுற்றல் பிரச்சினை இருப்பதாக தெரிவித்த ராமதாஸ், உடல்நலக் குறைபாடு இருந்தபோதிலும் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலால் விழாவில் பங்கேற்றதாக கூறினார்.
இறுதியாக, “உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு எப்போதும் மாறாது. என்னைப் பார்க்க வாருங்கள். ஆனால் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.



