கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹனூர் அருகே உள்ள தோமையார்பாளையம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடுவதாக நேற்று முன்தினம் இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷிவராஜ், சேகரையா, அனில்குமார் உள்ளிட்ட 7 பேர் இரு குழுக்களாக பிரிந்து சென்று வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் வனத்துறையினரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மகிமை தாஸ் (48) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரமடைந்து கொள்ளேகால், ஹனூர், தோமையார்பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
போலீஸார் குவிப்பு
சம்பவத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் மைசூரு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்–மந்திரி விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கூறுகையில், “இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மைசூரு கே.ஆர். மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவர்கள் நடத்திய தாக்குதலில் வனத்துறையை சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
‘மாடு மேய்க்க சென்றவர்கள்’
இதனிடையே, கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலேயே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகித்து வனத்துறையினர் நெஞ்சுப் பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இந்த சம்பவத்தால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



