திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால்,
பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அலட்சியம் காட்டி வந்தததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று அப்பகுதி பெண்கள் திடீரென காலி குடங்களுடன் தனியார் பேருந்தை சிறைபிடித்து செங்கம் – நீப்பத்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சம்பவம் அறிந்து விரைந்து சென்ற மேல் செங்கம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் வழங்க துறை சார்ந்த அதிகாரியிடம் முறையிடப்படும் எனக் கூறியதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.