இந்தியா நடத்தியுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளன.
பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 14 நாட்களுக்கு பிறகு நடந்த பதில் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரின் குடும்பத்தினரின் 10 பேர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பதில் தாக்குதல் ‘போர் நடவடிக்கை’ என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயுத படைகளுக்கு தெரியும் எனக் கூறினார். இதனால் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேநேரம், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ‘இந்தியா இனி தாக்குதலை நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்தப்படும்’ என தெரிவித்தார். இதனால், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?, அதனால் போர் உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த தாக்குதல் குறித்து தனக்கு தாமதமாகத்தான் தகவல் கிடைத்ததாகவும், இந்த தாக்குதல் வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் தள பதிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சுமுகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா நடத்தியுள்ள தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம் விவரித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா
சீன வெளியிறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
ரஷ்யா
இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இரு தரப்பும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனறும், ராஜ ரீதியிலான நடவடிக்கை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து
பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆதரவளிக்க இங்கிலாந்து தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் ஜோனதன் ரெனால்ட்ஸ் கூறியுள்ளார்.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பரேட் கூறுகையில், பயங்கரவாதத்தின் கொடுமையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
இந்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மிகவும் கவலை கொண்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.