விஜய்… பவன் கல்யாண் ஆகியோருக்கு அரசியல் புரிதல் எதுவும் இல்லை. தான் நடிகர் என்ற பின்புலம், மக்களை பற்றியும், மக்கள் பிரச்னைகள் பற்றியும் தெரியாமல்… இருவரும் தனது குடும்ப பின்புலத்தை மட்டும் வைத்த்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர பாஜக எதிர்ப்பாளர். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சாடி பலமுறை பேட்டியளித்துள்ளார். தற்போது பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில் பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரின் அரசியல் வருகை குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.
அவர் அப்படி என்னதான் சொல்லி இருக்கார்னு பாப்போம் :-
பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது ரசிகர்கள் பட்டாளத்தை மட்டுமே தொண்டர்களாகக் கொண்டவர். அவர் நான் சொல்லும் இந்த கருத்தை ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அதுதான் நிஜம்.
அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு பிரபலமான இயக்குநர். விஜய் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்காக ஏராளமான படங்களைத் தயாரித்தவர்.பவன்கல்யாண் பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர், விஜய் அரசியலுக்குப் புதியவர். நான் அவர்களோடு படங்களில் நடிக்கும் போது ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை.
அவர்கள் நடிகர்கள். அதன் பிரபலத்தைக் காரணமாக வைத்து அரசியலில் நுழைந்தனர். ஆனால், இருவரிடமும் தெளிவான அரசியல் பார்வையோ அல்லது மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை.
பவன் கல்யாண் கட்சி தொடங்கி 10 ஆண்டுகளில், அவரிடம் ஒரு தொலைநோக்குப் பார்வையோ அல்லது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இருப்பதைப் பார்த்ததில்லை. அதை நான் விஜய்யிடமும் காணவில்லை.
ஆனால், பவன் கல்யாண் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும் போது, மக்கள் இருக்கும் அமைப்பில் ஒரு வெற்றிடத்தைத் தேடுகிறார்கள்.அதன் காரணமாக அவர்களுக்கு சில இடங்கள் கிடைக்கக் கூடும். ஆனால், பின்னர் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும்.
விஜய் பேசும் பேச்சைக் கேட்கிறேன். ஆனால், எப்படிப் போராடுவது என்பதில் விஜய்க்கு ஆழமான புரிதல் இல்லை. பவன் கல்யாண் பிரபலமான நடிகர் என்பதால் நாட்டின் தலைவிதியை அவரது கைகளில் கொடுக்க வேண்டுமா? அவர் தனது சித்தாந்தத்தில் சீரற்றவர். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
ஒரேநேரத்தில் பவன் கல்யாண்,விஜய் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென நடிகர் பிரகாஷ்ராஜ் இப்படி இரண்டு பிரபல நடிகர்களை பற்றி பேட்டி கொடுத்தது ஏன்?
அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டனர். பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வரவில்லை. இப்படி இருக்கையில், அரசியலுக்கு வராத பிரகாஷ்ராஜ் எப்படி அரசியல் குறித்த விமர்சனம் வைக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளித்தவர்களில் பலர் பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆகி விட்டது.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை விஜய் பிரித்து விடுவார் என்று ஒரு அச்சம் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிக்குள் நிலவுகிறது. அப்படி சிறுபான்மையினர் ஓட்டுகள் பிரிந்து விட்டால், தன் கட்சி அரசியல் களத்தில் தோல்வியை சந்தித்து விடும் என்ற அச்சமும் உள்ளது.
இதனால் சிறுபான்மையினர் ஓட்டுக்களை தக்க வைத்து தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சி பிரகாஷ்ராஜை அரசியல் களத்தில் இறக்கி உள்ளது. பிரகாஷ்ராஜ் விரைவில் அந்த கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் கூட தொடங்க வாய்ப்புகள் உள்ளது. இதன் முதல் படி தான் பிரகாஷ்ராஜ் தவெகா தலைவர் விஜய் மீது பாய்ந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.
-மா.பாண்டியராஜ்