மக்களிடம் இருக்கும் கெட்ட பெயரில் இருந்து வெளியே வரவும், அமலாக்கத்துறையின் வழக்கினை திறம்பட கையாளவுமே துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
தமிழக மணல், தாதுமணல், கல்குவாரி ஆகிய வளம் கொழிக்கும் துறைகளை கொண்ட இயற்கை வளத்துறை என்ற கனிமவளத்துறையை துரைமுருகனிடம் இருந்து பறித்து, அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் கனிம வளங்கள் அதிகம் கடத்தப்படுகின்றன. இது பற்றி பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சோசியல் மீடியாக்களில் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி பரவி பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு கடுமையான கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறது. இந்த கனிமவள கொள்ளையை தடுப்பதில் அமைச்சர் துரைமுருகன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது பற்றி கேள்வி கேட்டால் கூட, கிண்டலாக பதிலளித்து வந்தார்.
ஒருமுறை சட்டசபையிலேயே எதிர்கட்சி துணைத்தலைவர் உதயக்குமார் இது பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தான் இருந்தார்.
அந்த சூழலிலும் துரைமுருகன் பொறுப்பாக பதிலளிக்காமல், ‘இந்த புகார் உங்கள் ஆட்சியிலும் இருந்தது. இது காலம் காலமாக நடப்பது தான்’ என்ற பதிலில் உங்கள் ஆட்சியில் நடந்தது போலவே இப்போதும் நடக்கிறது எனபதை ஏற்றுக்கொள்வதுபோல் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அமைச்சரின் இந்த கிண்டலை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை.
தவிர கனிம வளக்கொள்ளையில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விஷயத்திலும் அமைச்சர் துரைமுருகன், சிறப்பாக செயல்பட்டு வழக்கை திறம்பட எதிர்கொள்ளவில்லை. வழக்கு விசாரணை அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் திசையில் பயணிப்பதாக முதல்வர் கருதுகிறார்.
இந்த சூழலில், கல், மணல், தாதுமணல் விற்பனையாளர்கள் விலையை உயர்த்த அனுமதி கேட்டனர். அமைச்சர் துரைமுருகனும் விலையை உயர்த்த அனுமதி வழங்கினார். கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக, மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தவிர கட்டுமான நிறுவனங்கள் இந்த பிரச்னையை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கே கொண்டு சென்றனர். முதல்வர் விலையை குறைக்க உத்தரவிட்டார். அதன் பின்பே கட்டுமான பொருட்களின் விலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
இது போன்ற பல காரணங்களை வைத்து, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த மணல், தாதுமணல், கல்குவாரி துறைகள் துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கப்பட்டுள்ளது.
கல், மணல், தாதுமணல் விற்பனையாளர்கள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே இத்துறையில் மாநிலம் முழுக்க ஆளுமை செய்து வருகின்றனர். இவர்களை பற்றி அமைச்சர் ரகுபதி நன்கு அறிந்தவர். இதனால் சிக்கல் இல்லாமல் இத்துறையை கையாள்வார். தவிர மிகுந்த சட்ட நுணுக்கம் கொண்ட அறிவாளி. இவர் அமலாக்கத்துறை வழக்கையும் மிகவும் சிறப்பாக எதிர்கொள்வார். இதன் மூலம் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் துறையை வழிநடத்திச் செல்வார்.
இது போன்ற காரணங்களை வைத்தே தமிழக முதல்வர் இருவரின் துறைகளையும் மாற்றி உள்ளார். இந்த சிக்கலான நிலையில், அமைச்சர் துரைமுருகன், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன் கைவசம் இருந்த பொக்கிஷம் கையை விட்டு போய் விட்டதே என்ற காரணத்தில் மனம் உடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் தி.மு.க.,வினர் இதனை உறுதியாக மறுத்துள்ளனர். அமைச்சர் துரைமுருகனுக்கு 84 வயதிற்கு மேல் ஆகி விட்டது. அவர் முதுமையில் வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிக்கடி சிகிச்சை பெறுவார். இப்போது சளி தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்கும், அவர் வகித்து வந்த துறைகள் மாற்றப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
-மா.பாண்டியராஜ்