காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் உதவி எண்கள் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர விரைந்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அங்கு பயின்றுவரும் மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவுவதால், தமிழ்நாட்டிற்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில், உறுப்பினர் செயலாளர் வள்ளலாரின் ஒருங்கிணைப்பில் மாணவர்களை மீட்கும் பணி விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், காஷ்மீரைச் சேர்ந்த தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஆப்தாப், அப்பகுதி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டதாக கூறிய தமிழ்நாடு அரசு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. நிலைமை சீரடைந்ததும், மாணவர்கள் அனைவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு, வாட்ஸ்ஆப் எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் :-
Whatsapp Number: 75503 31902
TollFree Number: 80690 09901
Missed call Number: 80690 09900
Email: [email protected]