இந்திய-பாக் எல்லையில் நின்று தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் நாளுக்கு நால் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால், ஜம்முவில் உள்ள எல்லை கிராமங்களில் மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் கணக்கிலக்காத பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக, பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடக்கிற தாக்குதல்களை இந்திய ராணுவம் தடுத்து முறியடித்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதி, ஜம்மு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சீரமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
போர் பதற்றம் உருவாகும் சாத்தியத்தை உணர்ந்து, அந்த பகுதி மக்களை பாதுகாப்பாக வைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ராணுவ வீரர்கள் ஓய்வின்றி எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு பேரணி
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து இந்தப் பேரணி தொடங்கும். வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. இந்த பேரணியில் முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.