செய்யாறு அருகே 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, இந்திரா நகர் மக்கள் செய்யாறு- வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அனகாவூர் ஊராட்சி. இங்குள்ள இந்திரா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடியிருப்புகள் செய்யாற்றங் கரையை ஒட்டி அமைந்துள்ளன. செய்யாற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கிராமப் புறங்களுக்கு செல்லும் குடிநீர் பைப்புகள் ஆற்றிலேயே உடைந்து போயின. இவற்றை சரி செய்து கொடுக்க அனக்கா ஒரு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு சில ஊராட்சி மக்கள் மட்டும் தாங்களாவே முன்வந்து குடிநீர் பைப் லைனை சரி செய்து குடிநீரை வழக்கம் போல் பெற்றுச் செல்கின்றனர்.
அனுக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் பைப் லைன் இன்னும் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அனக்காவூர் ஒன்றிய அதிகாரிக்கும் புகாராக தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இந்திரா நகர் மக்கள் நேற்று அனக்காவூர் அருகே உள்ள செய்யாறு – வந்தவாசி சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்திரா நகர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எங்களுக்கு இன்றே குடிநீர் வழக்கம் போல் விநியோகிக்க வேண்டும். அதுவரை நாங்கள் மறியலை கைவிட மாட்டோம் என, பிடிவாதமாக கூறியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக போலீசார் இந்திரா நகர் மக்களிடம் பேசி மறியலை கைவிடச் செய்தனர்.



