சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் கனமழை பெய்ததால் கோமுகி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதன் பயனாக கோமுகி அணை அதன் முழு கொள்ளளவான 46 அடியில் 43.30 அடி தற்பொழுது நிரம்பியுள்ளது. கோமுகி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 486 கன அடியாக உள்ளது. அந்த வகையில் கோமுகி அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் நீர் வரத்து நிலையைப் பொறுத்து நீர் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே கோமுகி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோமுகி அணை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கோமுகி ஆற்றில் இறங்கவோ/ குளிக்கவோ/ துணி துவைக்கவோ/ ஆடு, மாடுகளை குளிக்க வைக்கவோ/ ஆற்றை கடக்கவோ கூடாது.
மேலும் ஆறுகளின் ஓரத்தில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட தேவையற்ற செயல்களையும் முற்றாக தவிர்க்க வேண்டும். மேலும் அணை திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை மற்றும் நீரின் அளவு குறித்து மாவட்ட நிர்வாகத்தால் முன்கூட்டியே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே கோமுகி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தெரிவித்துள்ளார்.



