திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாளரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (வயது40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டருகே 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவன் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி மாயமானது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சிறுவனைத் தேடி வந்த நிலையில்.. அங்கன்வாடி ஊழியரான லலிதா சிறுவனை கடத்திச் சென்று ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கியிருந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது. அதன்பேரில் லலிதாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையை அடுத்து குற்றவாளி லலிதாவிற்கு 5 பிரிவுகளின் கீழ் மொத்தம் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
இந்த 54 ஆண்டு கால சிறை தண்டனையையும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி அதிகபட்சமாக விதிக்கப்பட்ட 20 ஆண்டு காலம் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 6 லட்சம் நிதியுதவி வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளி லலிதா திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.



