வேலூர் மாநகர் அலங்கார் தியேட்டர் பின்புறம் உள்ள ரங்கசாமி நகரை சேர்ந்தவர், கீர்த்திகா. 9 மாத கர்ப்பிணியான இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் (வயது24) என்பவன் கத்தியால் குத்தியசம்பவம் வேலூரில் அரங்கேறிஇருக்கிறது.
கீர்த்திகாவின் அண்ணன் சக்திவேலுக்கும் (25) சதீஷுக்கும் இடையே ஐந்து மாதத்திற்கு முன்பு, கிரிக்கெட் விளையாடும்போது கைகலப்பு ஏற்பட்டது. அது நாளடைவில் முன் விரோதமாக மாறி நேற்று முன்தினம் இரவு சக்திவேலுக்கும், சதீஷுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது கத்தியை மறைத்து வைத்திருந்த சதீஷ், சக்திவேலின் தலையில் குத்தினான் இதில் சக்திவேல் கீழே விழுந்தார். அப்போது மோதலை தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண் கீர்த்திகாவின் வலது கையிலும் சதீஷ் பலமாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான்.
இதில், கீர்த்திகாவின் கையில் கத்தி ஆழமாக குத்தியதால், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கீர்த்திகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவர், வேலூர் பென்ட்லாண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.
கீர்த்திகாவின் அண்ணன் சக்திவேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷையும், அவனுடைய தந்தை சரவணனையும் தேடி வருகின்றனர்.



