மக்கள் மகிழ்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்றுள்ளார். அவர் நேற்று காலை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காரைக்குடியில் திருச்சி பைபாஸ் சாலையில் ரூ 100 கோடி மதிப்பீட்டில் சுட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும், 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து சட்டக்கல்லூரி அருகே ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினிடைடல் பார்க்கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து காரைக்குடியில் நடந்த நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயம் கிடைத்த மண் இந்த மண் பலரின் வீரத்தால், தியாகத்தால் சிவந்த மண். ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியார் வாழ்ந்த மண்.
தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்று மத்திய அரசு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக பாராட்டி உள்ளது.
ஆனால் தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் பிரதமர் பேசுகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், கவர்னரும் படிக்க வேண்டும். மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது. மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது. கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை காலி செய்துவிட்டு, வேறு பெயரில் புது திட்டம் கொண்டு வந்து இருக்காங்க விக்சித் பாரத் திட்டம் திரும்பப்பெறதீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து புதிய வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் திமுக ஆட்சிதான் மக்கள் மகிழ்ச்சியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.



