ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் மற்றும் அங்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய குடிமக்கள், சம்பவ இடங்களைப் புகைப்படம் எடுப்பது அல்லது சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பாகக் கடுமையான எச்சரிக்கையை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமீரக அதிகாரிகள் விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்:
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை: விபத்துக்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடந்த இடங்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் விமான நிலையங்களுக்குள் (வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில்) புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ பதிவு செய்வதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகக் கட்டுப்பாடுகள்: ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது வெடிப்புச் சிதறல்களால் (Shrapnel) ஏற்படும் பாதிப்புகளைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அமீரக சட்டப்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை ஒலிகள்: பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை ஒலிகள் (Warning Alerts) கேட்கும் போது, உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆர்வத்தின் காரணமாகப் புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள்: உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் வெடிப்புச் சிதறல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் விழுந்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் தொடவோ அல்லது நெருங்கவோ வேண்டாம். இது குறித்து உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதன் மூலம் தேவையற்ற சட்ட சிக்கல்களைத் தவிர்க்கலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.




