மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அவரது முடிவு பொது வாழ்வில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் தன்னலமற்ற சேவையின் உயரிய வெளிப்பாடு என பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இந்திய கல்வித் துறையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தியதிலும் கல்வி அமைப்பை மேம்படுத்தியதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
மேலும், பரந்த பொதுநலனைக் கருத்தில் கொண்டு அவர் பதவியில் இருந்து விலகியிருப்பது, பொது வாழ்வில் நேர்மை மற்றும் சுயநலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையை பிரதிபலிப்பதாகவும், இந்த முடிவில் தர்மேந்திர பிரதானுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்றும், அவரது எதிர்காலப் பணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாகவும் நிதின் நவீன் கூறியுள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிவில், தர்மேந்திர பிரதானின் பொதுச் சேவை பல தசாப்தங்களாக தொடர்வதாகவும், கல்வித் துறையை வலுப்படுத்துவதிலும் மாணவர் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டதிலும் அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ள கிரண் ரிஜிஜு, கல்வி சீர்திருத்தங்களை துணிச்சலுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் முன்னெடுத்த தர்மேந்திர பிரதானுக்கு நன்றி தெரிவித்ததுடன், அதே உறுதியுடனும் நேர்மையுடனும் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா “நாடே முதலில், கட்சி அடுத்தது, தனிநபர் கடைசியாக” என்ற பாஜகவின் அடிப்படைக் கொள்கையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் இயக்கத்தில் இருந்து பொதுவாழ்வை தொடங்கி மத்திய அமைச்சராக உயர்ந்த தர்மேந்திர பிரதான், மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தேவையான நேரத்தில் பொறுப்பேற்கும் ஜனநாயக பண்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பதவிகள் தற்காலிகமானவை என்றாலும் மக்களின் நம்பிக்கையே நிரந்தரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியிருப்பது, பாஜக கடைப்பிடிக்கும் ஜனநாயக விழுமியங்களையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக சஞ்சய் குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



