பாகிஸ்தானுடன் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி, நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின.
இதனால், எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அவை அனைத்தையும் நடுவானில் மறித்து, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் ஆலோசனை நடத்தி உள்ளார்.
எல்லையில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அனில் சௌஹான் விளக்கிக் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பிரதமர் மோடி ஆலோசனை
இதைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.