ஆடு,மாடு மேய்த்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கிறேன். கிடைத்த நேரத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்…” விரக்தி? ஏமாற்றம்? கலந்த அண்ணாமலையின் இந்தக் கூற்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று அவர் கூறியிருக்கும் அந்த வார்த்தை மிகப்பெரிய நெருடலை எமக்குள் ஏற்படுத்துகிறது. அபப்டி என்றால் இதற்கு முன்னர் மகிழ்ச்சியாக இல்லையா? என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி, தமிழக பாஜக பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்ட பின்னர் அண்ணாமலை முன்போல் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை. அண்ணாமலை போல் புதிய தலைவர் விறுவிறுப்பாக செயல்படவில்லை. அதனால் கட்சி தொய்வடைந்து விட்டது. சோர்ந்து விட்டது. சுணக்கம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் தொண்டர்களும் ஆதரவாளர்களும்.
அவ்வப்போது பேட்டி
பதவியேற்ற முதல் மாதம் நயினார் நாகேந்திரன் பத்திரிகைப் பேட்டிகள் கொடுத்தார். பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டார். திமுகவுக்கு எதிராகக் கருத்துகள் கூறினார். ஆனால் அவை எதுவுமே பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை. அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் பேட்டிகள் காரசாரமாக இருக்கும். TRP- க்காகவே ஊடகங்கள் அண்ணாமலையைச் சுற்றிச் சுற்றி வந்தன.
எகிறிய TRP ரேட்
அவர் உட்கார்ந்தாலும், நின்றாலும், தண்ணீர் குடித்தாலும், தேநீர் பருகினாலும், பளு தூக்கினாலும், கல்லூரியில் உரை நிகழ்த்தினாலும், வேறு எது செய்தாலும் அவை அனைத்தும் செய்திகளாயின. ஊடகங்களுக்கு நல்ல TRP-யும் கிடைத்தது.
“திமுகவை வீழ்த்த இந்தக் கூட்டணி போதாது. இதை ஒரு வலுவான கூட்டணியாக நான் பார்க்கவில்லை………” என்றார் அண்ணாமலை. ஊடகங்கள் இதை உடனடியாகச் சர்ச்சை ஆக்கின. இந்தக் கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்பது தெரியும். உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிப்பட்ட முறையில் விரும்பி அமைத்த கூட்டணி என்பதால் அதைப் பற்றி அண்ணாமலை எதிர்க் கருத்து கூறாமல் இருந்திருக்கலாமோ?
விலகி இருக்கும் அண்ணாமலை
கட்சியின் தேசியத் தலைவர் நட்டா வந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. கோயம்புத்தூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. சிவகிரி இரட்டைக் கொலைகளை எதிர்த்து உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்தார், அண்ணாமலை. இதைப் பற்றி கட்சித் தலைமையைக் கலந்தாலோசித்தாரா என்று தெரியவில்லை. கட்சித் தலைமையின் அனுமதி பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறி வாழ்ந்து வரும் வங்கதேசத்தவர்களை அடையாளம் கண்டு உடனே வெளியேற்ற வேண்டும் என்ற பாஜக போராட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
இவை அனைத்தையும் அண்ணாமலை புறக்கணித்தாரா அல்லது அவருக்கு வேறு ஏதாவது தவிர்க்க முடியாத அலுவல்கள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இவை அனைத்திலும் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தால் விஷயம் வேறு லெவலுக்குப் போயிருக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்,அண்ணாமலை. அண்ணாமலை பங்கு கொள்ளாத நிகழ்ச்சிகள் சுவாரஸ்யம் அற்றவையாக இருக்கின்றன. கட்சிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை தீவிரமாகப் போராடினார் என்றும், ஆந்திரப்பிரதேச எம்எல்ஏக்கள் தயவுடன் மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் என்றும், மத்திய மந்திரி பதவி பெற்று விடலாம் என்றும் அண்ணாமலை ஏங்கியதாகவும் முயற்சித்ததாகவும் பரவி வரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்னும் மூன்று ஆண்டுகள் கட்சித் தலைமையில் தொடர ஆசைப்பட்டாலும் மத்திய பாஜக தலைமை தன் பேச்சை கேட்கவில்லையே என்று அண்ணாமலை வருத்தப்படுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சி நடவடிக்கைகளில் அவர் ஈடுபாடு செலுத்தவில்லை என்றும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். தனக்கென்று தனி பாணி அமைத்து அதில் பயணிக்க விரும்புகிறார் அண்ணாமலை.
சுயநலத்தோடு செயல்பட்டாரா?
தன்னை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்ய விரும்புகிறார். மாநிலத் தலைமைக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய விரும்பவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணாமலை இவ்வளவு சுயநலவாதியா? இவ்வளவு தரம் அற்றவரா? நிச்சயம் இல்லை. கட்சித் தலைமை அண்ணாமலையை மாநிலப் பொறுப்பிலிருந்து மாற்றிய உடனேயே அவருக்குத் தகுந்த வேறு ஏதாவது கட்சிப் பொறுப்பை வழங்கியிருக்க வேண்டும். இதைச் செய்யாதது தான் தவறு. இதனால் தான் அண்ணாமலை இவ்வளவு எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார்.
ஆனால் கட்சித் தலைமையை குறை கூறிப் பலன் இல்லை. பகல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ஆபரேஷன் சிந்தூர் ஆரம்பித்தது. இது மொத்த அரசு நிர்வாகமும் பாஜக கட்சி தலைமையும் மும்முரமாக இருந்ததால் அண்ணாமலை விஷயம் ஆறப்போடப்பட்டது என்பதுதான் உண்மை.
அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுகவிற்குச் சரியான எதிர்க்கட்சி பாஜக தான் என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்குக் கட்சியைக் கொண்டு போய் நிறுத்தியவர் அண்ணாமலை. ஆனால் தற்போது பாஜக அந்த இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகத் தோன்றுகிறது.
பாஜகவை விட அதிமுக தான் அதிகமான அறிக்கைகள் வெளியிடுகிறது. விமர்சனங்கள் வைக்கிறது. இதனால் அக்கட்சிக்குக் கூடுதல் விளம்பரம் கிடைக்கிறது. இதனால் அதிமுகவுக்கே நன்மை. பாஜகவுக்கு என்ன நன்மை?
முன்னிலைபெற்ற அதிமுக
அண்ணாமலை அகன்ற பிறகு பாஜகவை விமர்சிப்பதை திமுக முற்றிலும் விட்டு விட்டது. அதிமுகவை தான் திமுக தீவிரமாக எதிர்க்கிறது. அதற்குக் காரணம் பாஜகவை விட அதிக அறிக்கைகளை விடுவது அதிமுக தான். இதிலிருந்தே தெரியவில்லையா பாஜக தன் இடத்தை அதிமுக விற்கு விட்டுக் கொடுத்து விட்டது என்று?
இதே நிலை தொடர்ந்தால், மக்கள் நினைவில் இருந்து பாஜக கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும்.
இன்னும் சில மாதங்களில் தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். கட்சி வலுவாக இருந்தால் தான் பேரம் சிறப்பாக அமையும். பேரம் பேச வந்த கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கி அவமானப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி.
அண்ணாமலை தலைவராக இருக்கும் போது கட்சிக்குள் ஜாதிவாதம் பேசப்பட்டது. மூத்த தலைவர்கள் மற்றும் முன்னணித் தலைவர்கள் அண்ணாமலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. ஆளுக்கு ஆள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அண்ணாமலைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வந்தனர்.
ஆனால், தலைமையில் இருந்து அண்ணாமலை அகன்ற பிறகு, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஏன்?
அண்ணாமலையால் அடக்க முடியாத இவர்களை நயினார் நாகேந்திரன் அடக்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது தாங்களே அடிபணிந்து விட்டார்களா? இவர்களின் தற்போதைய அமைதியை நைனார் நாகேந்திரனுக்கு இவர்கள் கொடுக்கும் ஆதரவு என்று புரிந்து கொள்ள முடியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தல் வந்துவிடும். அண்ணாமலை கட்சியை வளர்த்து நிறுத்திய இடத்திலிருந்து சற்றும் பிசகாமல் கட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு நாள் ஒரு பொழுது கூட வீணாக்க முடியாது.
தினம் தினம் அறிக்கைகள்
தினம் ஒரு அறிக்கை, தினம் ஒரு போராட்டம், ஆளுங்கட்சிக்கு தினம் ஒரு சவால் என்று அரசியல் களத்தில் அதிரடியாகச் செயல்பட வேண்டும். கட்சியை மக்கள் மனதில் உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். அவற்றைச் செயல் படுத்த வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை.
இதனால் அண்ணாமலை இல்லாத பா.ஜ.க., மூலவர் இல்லாத கோயில் போல் காணப்படுகிறது. இல்லையில்லை… அண்ணாமலை இல்லாத தமிழக அரசியல்களம் மூலவர் இல்லாத கோயில் போல் காணப்படுகிறது. அண்ணாமலை இல்லாத அரசியல் களம் முழுக்க திராவிட கட்சிகளின் கைக்குள் போய் விட்டது. இது வரமா? சாபமா? என்பது தெரியவில்லை. பாஜக மாநிலத் தலைமை இதைப் புரிந்து கொண்டுள்ளதா என்பதே ஆயிரம் டாலர் கேள்வி.????யாக உள்ளது.
-மா.பாண்டியராஜ்