பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மண்டபங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அக்.30-ம் தேதி பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார். ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும். 1920-ஆம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் பெருமகனார் ஆவார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார். ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர். முத்துராமலிங்கத் தேவர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட பணிகள்
முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு, மதுரை மாநகரில் கண்டோர் பிரமிக்கும் வகையில் 12 அடி உயர பீடத்தில் 13 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான வெண்கலச் சிலையைத் திறந்துவைத்து அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்; தேவர் திருமகனார் தோன்றிய பசும்பொன் மண்ணில் அவருக்கு நினைவில்லம் கட்டினார்; தேவர் சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டம், மேல்நீலிதநல்லூர், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி – ஆகிய இடங்களில் தேவர் பெருமகனாரின் திருப்பெயரில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள் அமைத்தார்; மதுரை ஆண்டாள்புரம் அருகே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு, “முத்துராமலிங்கத் தேவர் பாலம்” எனப் பெயர் சூட்டினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெருமகனார் திருப்பெயரில் மாணவச் செல்வங்களுக்கு உதவித் தொகை வழங்கிடும் வகையில் 25 இலட்சம் ரூபாய் முதலீட்டில் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.