பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தைப்பூச விழாவில் பங்கேற்க சென்னை, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் மாட வீதிகளில் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மாலை உற்சவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா நடைபெற்றது. டி.எஸ்பி. விக்னேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷா ரவி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.