தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொளத்தூரில் தொடர்ந்து நான்காவது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2011 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் அவர், மீண்டும் வெற்றியைத் தொடர முயற்சிக்கிறார்.
அதே நேரத்தில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது அவரது முக்கிய அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது. மேலும், விஜய் பெரம்பூருடன் சேர்த்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதி போட்டியாளர்கள்:
பெரம்பூரில் தவெக சார்பில் விஜய், திமுக சார்பில் ஆர்.டி. சேகர், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக ம. திலகபாமா, நாம்தமிழர் கட்சி சார்பில் வெற்றித்தமிழன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
கொளத்தூர் தொகுதி போட்டியாளர்கள்:
கொளத்தூரில் திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம்தமிழர் கட்சி சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ். பாபு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. முக்கிய தலைவர்கள் நேரடியாக களமிறங்கியுள்ளதால், இந்தத் தேர்தல் கடும் போட்டியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.



