காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கும், அது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ள பேச்சுக்கும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகுமாரின் பேச்சு ஆணவப் போக்கு
“மேகேதாட்டுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் பேசியிருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து, ஒரு பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்திலும், தங்களது காங்கிரஸ் கட்சியும் தற்போதைய தமிழக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்ற துணிச்சலிலும் டி.கே.சிவகுமார் இவ்வாறு துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளதாகத் தெரிகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகேதாட்டுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செயல்படுத்த முயல்வது, டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவது என்பது ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகும்.
காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தவிதத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்.”
தமிழக முதல்வர் வாய் திறப்பாரா?
மேலும் அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் காட்டும் மௌனம் குறித்து கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்:
“காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது.
காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது என்பதை, முதல்வர் விஜய் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது – இதற்காகவாவது தமிழக முதல்வர் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.”
இவ்வாறு கே.என்.நேரு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



