தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு (PG Medical Courses) படித்து முடித்த அரசு சாரா மருத்துவர்கள், தங்களை கட்டாய அரசுப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னையில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும். இந்த ஒப்பந்தத்தை மீறினால், 20 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை பிணைத்தொகையாக (Bond Amount) செலுத்த வேண்டியிருக்கும்.
ஏன் இந்த போராட்டம்? இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தை (DME) 100-க்கும் மேற்பட்ட அரசு சாரா மருத்துவர்கள் நேற்று முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், “அரசு கல்லூரிகளில் படித்த அரசு சாரா மருத்துவர்கள் 2 ஆண்டுகள் அரசுப்பணி செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது உண்மைதான். ஆனால், எங்களோடு படித்த பலரை இந்த ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரிகள் விடுவித்துவிட்டனர். அதேபோல், போதிய பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி, எங்களுக்கு ஜூனியராக உள்ள மருத்துவர்களையும் இந்த ஒப்பந்த கடமையில் இருந்து விடுவித்துள்ளனர். ஆனால் எங்களை மட்டும் ஏன் இன்னும் விடுவிக்காமல் ஒப்பந்தத்தில் வைத்துள்ளனர் என்று தெரியவில்லை” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அதிகாரிகளின் உறுதிமொழி: முற்றுகை போராட்டத்தை அடுத்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்ற மருத்துவர்கள், “ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால், மீண்டும் பெரிய அளவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் கீழ்ப்பாக்கம் மருத்துவ இயக்கக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



