விருதுநகரில் ரூ.80 கோடி மதிப்பில் புல்லலக்கோட்டை ஜங்சன், சூலக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் மாவட்ட விளையாட்டரங்கம்–அரசு மருத்துவக் கல்லூரி இடையே அமைக்கப்பட்டுள்ள இரும்பு நடை மேம்பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புல்லலக்கோட்டை ஜங்சன் மேம்பாலம், மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே உள்ள நடை மேம்பாலம், சூலக்கரை மேம்பாலம் ஆகிய பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதியளித்துள்ளது. மாவட்ட விளையாட்டரங்கம்–அரசு மருத்துவக் கல்லூரியை இணைக்கும் நடை மேம்பாலத்தில் லிப்ட் அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும்.
லிப்டுக்கான மின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே ஏற்க உள்ளது. இதற்காக மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை மின் கட்டணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தரமான மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தகுதித் தேர்வு தேவை என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் நிலைக்குழு அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டபோது அனைத்து கட்சிகளும் அதை வரவேற்றன. அதிமுகவில் 9 எம்.பி.க்கள் இருந்தபோதும், அப்போது யாரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மக்கள் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு சட்டமாக்கப்படவில்லை. பின்னர் பாஜக ஆட்சியில் 2017-ல் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது.
மாணவி அனிதா தற்கொலைக்குப் பிறகு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி வாய் திறக்கவில்லை. தேசிய தேர்வு ஆணையத்தின் முறைகேடுகளும் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளன.
மோடி அரசை எதிர்த்துப் பேச பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, அதிகாரிகள் தப்பித்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் லஞ்சம் வாங்குவது தொடர்பான உரையாடல் இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். யார் ஊழல் செய்தார், யார் தவறு செய்தார் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும். ரெக்கார்டு செய்யும் பழக்கத்தை பாஜகவுடன் அண்ணாமலை விட்டுவிட வேண்டும். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.
பட்டாசு ஆலைகளில் சிறிய மாற்றம் இருந்தாலும் அதிகாரிகள் சீல் வைக்கும் நிலை உள்ளது. அதிகாரிகள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகளின் பொறுப்பு, பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவை முக்கியம். விருதுநகர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொழிலான பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படக் கூடாது.
அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 30 சதவீத பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.



