“என்னைக் கொலை செய்ய சதி நடந்தது என்று கார் விபத்து குறித்து மதுரை ஆதினம் பரபரப்பாக குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே, மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில், திருக்கயிலாய பரம்பரை தர்மபுரம் ஆதீனத்தின் சர்வதேச சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் 6 வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், நேற்று தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “புத்தர் ஆட்சி காலம் பொற்காலம் என்பார்கள், நான் பார்த்ததில்லை. ஆனால் எங்கள் தர்மபுர ஆதினத்தின் காலம் பொற்காலம் தான்” என கூறினார்.
மேலும் பாஜகவில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளதாகவும், எத்தனையோ பேர் ஆண்டாலும், சிறந்த ஆளுமையாக இருப்பவர் பிரதமர் மோடி தான் எனக்கூறினார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் துணிச்சலானவர் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்வதாகவும், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதாகவும், இந்துக்கள் சுண்டல் தருகிறார்களா என கேட்பதாகவும் தெரிவித்தார். பெண்கள் குங்குமம் வைப்பதில்லை. ஸ்டிக்கர் பொட்டும் Fair & Lovely போடுகிறார்கள் என சாடினார்.