“தற்கொலை வெடிகுண்டை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக மாநில வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது.
இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும், இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், “தற்கொலை வெடிகுண்டை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லத் தயார்” என கர்நாடக மாநில வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் பி.இசட் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நாங்கள் இந்தியர்கள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராக நாம் போருக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் போராடத் தயாராக இருக்கிறேன். ஓர் அமைச்சராக, அவர்கள் (ராணுவம்) என்னை அனுப்பினால், நான் முன்னாடி செல்வேன். தேவைப்பட்டால், நான் தற்கொலை குண்டை அணிவேன்.
இதை, நான் நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு பேசவோ இல்லை. நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், (பிரதமர் நரேந்திர) மோடி மற்றும் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷா எனக்கு ஒரு தற்கொலை குண்டைக் கொடுக்கட்டும், நான் அதை அணிந்து பாகிஸ்தானுக்குச் செல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா, “பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்திருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அவர், “எதிரியை தோற்கடிப்பதற்கான அனைத்து வழிகளும் தோல்வியடைந்தால் மட்டுமே, ஒரு நாடு போருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட வேண்டும்… மத்திய அரசு ஏற்கெனவே சில ராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது” என அவர் விளக்கமளித்திருந்தார்.