”ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை” என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
பகல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதம் தேர்வித்தன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய விமானப் படை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: –
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம். விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை. சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும், பரப்புவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.