தி.மு.க., நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள விஷேச வீடுகளுக்கு அழைப்பு இல்லாவி்ட்டாலும் பங்கேற்று மொய் கவர் வைக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை வாய் மொழியாக உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.,வின் திருமங்கலம் பார்முலா பயங்கரமாக ஹிட் அடித்தது. அதன் பின்னர் பல தேர்தல்களில் இந்த பார்முலா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது காலச் சூழல்கள், அரசியல் சூழல்கள் மாறி உள்ளன. தி.மு.க.,விற்கு எதிராக அ.தி.மு.க.,- பா.ஜ.க., வலுவான கூட்டணியை உருவாக்கி விட்டன.
பா.ஜ.க.,வுடன் பேச்சு நடத்தியதற்கே நாம் தமிழர் கட்சிக்கு அரசியல் கட்சி என்ற அங்கீகாரமும், சின்னமும் ஒதுக்கப்பட்டு விட்டது. இன்னும் சில கட்சிகள் பா.ஜ.க., பக்கம் சாயும். பா.ஜ.க.,வை போல் மற்ற கட்சிகளை துாக்கும் அளவுக்கு தி.மு.க.,வுக்கு இப்போதைக்கு பலம் இல்லை. காரணம் பா.ஜ.க., மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால், ஏதாவது ஒரு ஆசை காட்டியோ, மிரட்டியோ எப்படியோ இதர கட்சிகளை துாக்கி விடுகிறது.
அந்த அளவுக்கு அடிபணிய வைக்கும் அளவுக்கு தி.மு.க.,வால் செயல்பட முடியாது. தவிர தி.மு.க.,வுடன் இப்போது உள்ள கூட்டணி கட்சிகளே குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டன. நடிகர் விஜய் வேறு பல வழிகளில் குழப்பம் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவர் யாருடன் கூட்டணி சேருவார்? கூட்டணி சேருவாரா? அல்லது தனியாக நிற்பாரா? என்ற குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தி.மு.க., மக்களிடம் உள்ள தொடர்பினை நெருக்கப்படுத்திக் கொள்ள கூடுதல் முயற்சிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சி நிர்வாகியும், அதாவது மாவட்டம் முதல் கிளை செயலாளர் வரை தங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நடக்கும் அனைத்து விஷயங்கள் தொடர்பான விஷேச நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அதாவது அவர்களிடம் இருந்து அழைப்பு வராவிட்டாலும் வலியச் சென்று பங்கேற்க வேண்டும்.
அந்த வீடுகளின் நிகழ்ச்சி வலுவாக மொய் கவர் வைக்க வேண்டும். இந்த விவரங்களை படத்துடன் தலைமைக்கு பதிவிட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு மதிப்பெண் அந்த நிர்வாகிக்கு வழங்கப்படும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் வாழ்வு கிடைக்கும். விஷேச நிகழ்ச்சி மட்டுமல்ல… தங்கள் பகுதியில் நடக்கும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்.
விபத்து, மருத்துவ நெருக்கடிகளில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவ வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பெண் கிடைக்கும். இதுவே அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் நடந்த விஷேச நிகழ்ச்சிகளில் தி.மு.க., நிர்வாகிகள் பலரும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சிகளுக்கு வலுவான மொய் கவர் வைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் இந்த திடீர் சர்ப்ரைஸ்சால் மெய்மறந்து போயினர். இந்த இடத்தில் ‘மொய் கவர் பார்முலா’ வெற்றி பெற்றதால் தமிழகம் முழுவதும் இதனை கடைபிடிக்க உத்தரவு பறந்துள்ளது.
எப்படி ஒவ்வொரு பூத்களிலும் பதிவாகும் ஓட்டுகளில் 60 சதவீதம் தி.மு.க.,விற்கு விழும் வகையில், இப்படி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகள் மக்களை ‘கவர’ வேண்டும். விசேஷங்கள் வைக்காவிட்டால், அந்த பகுதியில் வசிப்பவர்களின் உடல்நிலைகளை கேட்டறிந்து மருத்துவ உதவிகள் செய்யுங்கள். நமக்கு நிச்சயம் வரும் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 60 சதவீதம் ஓட்டுகள் அவசியம் என தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த ‘மொய் கவர் பார்முலாவை’ வெற்றி கொள்ள வழியில்லாமல், அ.தி.மு.க., நேற்று ரத்ததான பார்முலா நடத்தியது. மாநிலம் முழுவதும் நேற்று 85 இடங்களில் அ.தி.மு.க.,வினர் ரத்ததான முகாம்களை நடத்தி, அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரத்தம் வழங்கினர். இதில் அ.தி.மு.க.,வினர் சிறப்பான ஆர்வம் காட்டினர்.
இதே பார்முலாவை, அதாவது தி.மு.க.,வினர் ‘மொய் கவர் பார்முலாவை’ நாமும் கையில் எடுக்க வேண்டும். பா.ஜ.க.,வையும் இந்த பார்முலாபடி செயல்பட அறிவுறுத்த வேண்டும். இப்படி தி.மு.க.,விற்கு ஆரம்பத்திலேயே முட்டுக் கொடுக்க வேண்டும். விஜய் கட்சியை கட்டாயம் அ.தி.மு.க., பக்கம் துாக்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், வரும் 2026 தேர்தலில் தி.மு.க., நம்மை விளாசி விடும் என அ.தி.மு.க.,வினர் தங்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
– மா.பாண்டியராஜ்