மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சித்திரை நிலவு மாநாட்டில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
அருந்ததியர்களுக்கு 3; முஸ்லிம்களுக்கு 3.5; வன்னியர்களுக்கு 13.1 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, ஜனார்த்தனன் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, அருந்ததியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கினார். வன்னியர்களுக்கு வழங்கவில்லை.
அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, 45 ஆண்டு காலமாக ராமதாஸ் உழைக்கிறார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில், ஒதுக்கப்பட்ட 20 சதவீதத்தில் வன்னியருக்கு 10 அல்லது 12 சதவீதம் ஒதுக்கீடு செய்வதாக கூறுகின்றனர். ஆனால், வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., – ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., போன்ற உயர் அதிகாரிகள் பொறுப்பில், 109 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் வன்னியர். இது சமூக அநீதி.
பின்தங்கியுள்ள வன்னியர் சமுதாயத்தை முன்னேற்ற, முதல்வர் ஸ்டாலினிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை. அதைபற்றி அவருக்கு கவலையும் இல்லை. நான் வன்னியர் சமுதாயத்தினருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை.
பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் குரல் கொடுக்கிறேன். வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து பின் தங்கிய சமுதாயத்தினருக்கும், இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். நம் முக்கிய கோரிக்கை, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை செய்வதாக, மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. இது ராமதாசுக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் முன் வரமாட்டார். ஆனால், கணக்கெடுக்க வைக்க நாம் போராடுவோம். இவ்வளவு காலமாக கோரிக்கைகளை நிறைவேற்ற, நாம் மனு கொடுத்தோம். இனி மனு வாங்குகிற சமுதாயமாக மாற வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால், மனசு இல்லை.
நாட்டின் வளர்ச்சி, அடுக்குமாடி கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதி மட்டுமல்ல; கல்வி அறிவு கொடுக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும்; அது தான் வளர்ச்சி. நான் முதல்வராக இருந்திருந்தால், எந்த சமுதாயத்தினர், எந்த நிலையில் இருக்கின்றனர் என்ற கணக்கெடுப்பை நடத்த முதல் கையெழுத்தை போட்டிருப்பேன்.
சென்னைக்கும், கன்னியாகுமரிக்கும், 10 வழி சாலை போடுவேன். விவசாயிகள் நிலத்தை தந்தால், திட்டத்தில் பங்குதாரராக சேர்ப்பேன். மாதாமாதம் பணம் வங்கி வாயிலாக வந்து சேரும். இப்படி பல திட்டங்கள் எங்களிடம் உள்ளன.
அதிகாரத்தை தாருங்கள். தமிழகத்தை சிங்கப்பூருக்கு நிகராக மாற்ற முடியும். தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை சொல்ல முடியும்; தீர்வும் காண முடியும். சமூக நீதியை நிலைநாட்ட வாய்ப்பு தாருங்கள்.
வரும் காலம் நம் காலம். யார் பின்னாலும் செல்லாதீர்கள். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக வாழ்கிறேன். தமிழகத்தை நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.