செய்யாறு அடுத்த அரசங்குப்பம் கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது அரசங்குப்பம் கிராமம். இந்த கிராமம் வெம்பாக்கம் தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலும் அமைந்துள்ளன. இது தவிர, 7 கிலோ மீட்டர் தொலைவில் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து இந்த கிராம வழியாக 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீரும் ராட்சத குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசங்குப்பம் கிராம எல்லையில் கல்குவாரி தொங்கி விட்டால் ‘டாரஸ் லாரிகள்’ தொடர்ந்து இவளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், தங்களது கிராமமும் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இதனால், இங்கு கல்குவாரி அமைக்கக் கூடாது என, அரசங்குப்பம் கிராம மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வெம்பாக்கம் தாசிலர் தமிழ்மணியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு வெம்பாக்கம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர். 11 மணி வரைக்கும் தாசில்தார் தமிழ்மணி அலுவலகத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென தாலுகா அலுவலகம் எதிரே உள்ள காஞ்சிபுரம் – கலவை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த தூசி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு கிராம சேர்ந்த மக்கள் செவி சாயிக்கவில்லை. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தாரையும், பேச அனுமதிக்கவில்லை. ‘எங்கள் கிராம எல்லையில் கல்குவாரி அமைக்கக் கூடாது இதுதான் எங்களது கோரிக்கை’ இதைத்தான் நாங்கள் ஒரு மாதத்திற்கு புகார் கடிதங்களை வழங்கி, எதிர்ப்பும் தெரிவித்து வந்தோம். இதற்கான என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என, மறியலில் ஈடுபட்டவர்கள் தாசில்தாரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கான பதிலை சொல்ல முடியாமல் தாசில்தார் திணறினார். நீங்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அலுவலகத்திற்கு வாருங்கள் உங்களுக்கான பதிலை எழுத்து மூலமாக கொடுக்கிறேன் என, தாசில்தார் கூறினார். இதை அடுத்து அரசங்குப்பம் கிராம மக்கள் மறியலை கைவிட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர். இதனால், வெம்பாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் – கலவை நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் இருபுறமும், இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.



