பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமை ஏற்று தெரிவித்ததாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டமாகும். வங்கிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய சிறப்பு கடன் முகாம்கள் நடத்த வேண்டும்.
குறிப்பாக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிற்துறை கடன்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன்களை ஒதுக்கவேண்டும். இந்த மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகம் இல்லை. 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது எனது முயற்சியால் செய்யாறில் சிப்காட் கொண்டு வந்தேன். ஒரு மாவட்டத்தில் தொழில் தொடங்கி வளர்ச்சி பெறுவதற்கும் வங்கியாளர்கள் உதவ வேண்டும். எங்கள் மாவட்டத்தில் படித்து முடித்த பொறியாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் அயல்நாட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் தொடங்குவதற்கும் மாவட்டத்தில் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கும் வங்கியாளர்கள் உதவ வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று
செயலாற்றி வருகிறார்.
மாநிலம் வளர்ச்சியடைய வங்கியாளர்கள் சமுதாய நோக்கத்தோடு செயலாற்ற வேண்டும். மகளிர் சுய உதவி குழு கடன்கள், கலைஞர் கைவினை திட்டம். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திட்ட கடன் போன்ற கடன்களுக்காக விண்ணப்பித்த தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் இருப்பதால் அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்கும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திட்டத்திற்கும் இந்த மாவட்டத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதோடு சமுதாயத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு வங்கியாளர்கள் கடனுதவிகள் வழங்க தனி கவனம் செலுத்தி முன்னுரிமை அளிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடையவும் மாவட்ட வளர்ச்சிக்கும் அலனத்து வங்கியாளர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆரஞ்சு ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இராமணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, திருவண்ணாமைலை மண்டல இந்தியன் வங்கி மேலாளர் இராமராஜன், மாவட்ட முன் மோடி வங்கி மேலாளர் முருகன்,அலனத்து வங்கியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



