பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டத்தில் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ. 23 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய நியாய விலை கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் தங்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், உயர் கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. 2006 – 2011 ஆட்சி காலத்தில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கவேண்டுமென அறிவுறுத்தியதன்படி அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக எலக்ட்ரானிக் தராசு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அப்பொழுது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு நியாய விலைகடை என்ற அடிப்படையில் ஒரே நியாய விலைக்கடைகளில் 3000 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருந்ததால் மக்களுக்கு பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருந்ததை அறிந்து 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை மக்களுக்காக செயல்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டது தற்பொழுது திராவிட மாடல் ஆட்சியில் 150 அட்டைகளுக்கு ஒரு பகுதி நேர நியாய விலைக்கடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று மக்கள் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியில் கிராமபுரனற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து கிராம சாலைகள் மேம்பாடு. சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி எலிக்குத்தி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் ரூ. 58.90 இலட்சம் மதிப்பீட்டில் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன . மேலும் ரூ. 40.54 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திலும், ரூ. 85.17 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும், ரூ.36.09 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலும், ரூ.44.11 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலைத் திட்டத்திலும், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 18.42 இலட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ. 4.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் இப்பகுதி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திமுக மாநகராட்சி செயலாளர் கார்த்திக் வேல்மாறன், பன்னீர், பிரியா விஜயரங்கம், மெய்யூர் சந்திரசேகர், திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.மணி, கூட்டுறவு துணைப்பதிவாளர் .வினோத், மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



