‘மன்னர் வகையறா’ திரைப்பட தயாரிப்புக்காக பெற்ற ரூ.4.5 கோடி கடன் தொடர்பான செக் மோசடி வழக்கில், நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக, பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. படம் வெளியான பின்னரும் அந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், விமல் வழங்கிய காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அது திரும்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.4.5 கோடி மதிப்பிலான செக் மோசடி தொடர்பாக தயாரிப்பாளர் கோபி, சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடிகர் விமலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் விமல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விமல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விமல், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை கருத்தில் கொண்டு, விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.



