வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.14.33 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.221.48 லட்சம் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 124.96லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதற்காகவும் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்.
மாணவர்கள் உயர்தரமான கல்வியை பாதுகாப்பான சூழலில் மனதிற்கினிய வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கிலும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் கூடுதல் இடவசதியுடன் கல்வி கற்றிடும் பொருட்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரப்படுவதுடன் பழைய வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் கல்வியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடம்) சிவசங்கர நாயகி, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



