திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
ஜவ்வாது மலைகளில் உருவாகும் நீரோடைகள் செய்யாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் நெல் சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆடி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் நெல் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
இந்த ஆண்டு, மழை முன்கூட்டியே பெய்த போதிலும், விவசாய வேலைகளுக்குத் தேவையான கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் தாமதமாகி நெல் சாகுபடியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 25.000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
இச்சூழலில், நெல் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை பாதி விலைக்கு கமிஷன் மண்டிகளில் விற்க வேண்டிய அவலநிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள், அனைத்துப் பகுதிகளிலும் உடனே திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



