திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் பங்குச்சந்தை – முதலீட்டாளர்களின் நலன்கள் மற்றும் விதிமுறைகள் என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி. கல்விக் குழுமத் தலைவர் கு. கருணாநிதி தலைமை தாங்கினார். கல்விக் குழும இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் பிரதீப் பழனி வரவேற்புரையாற்றினார். முதலாமாண்டு மாணவிகள் அக்ரட்டா, வெண்ணிலா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதிகள் முதலீட்டாளர்களை பாதுகாக்கும், எதிர்காலத்தில் மாணவர்கள் புதிய முதலீடுகள் மூலம் பங்கு சந்தையில் முன்னேற்றம் காண வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக வெங்கடேசன் கலந்து கொண்டு, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் நோக்கம், செயல்பாடு, முதலீட்டாளர்களின் நலன் பாதுகாப்பு, பரஸ்பர நிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ சையத் ஜஹிருத்தீன், வணிக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இறுதியில் மாணவி ஆர். தேசிகா நன்றியுரை ஆற்றினார்.



