கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், பாவந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி விடுதியினை (கல்லூரி மாணவியர் விடுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
ரிஷிவந்தியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சமூக நீதி விடுதி (கல்லூரி மாணவர் விடுதி) செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இக்கல்லூரியில் பயிலும் மாணவியர் பயன்பெறும் வகையில் சமூக நீதி விடுதி (கல்லூரி மாணவியர் விடுதி) பாவந்தூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமூக நீதி விடுதியில் 100 மாணவியர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், மாணவிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. விடுதிக்கு நிரந்தர கட்டடம் கட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவர் சா.வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் க.கீதா, ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் சண்முகம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



